Tuesday, 24 January 2017

ஆரோக்கியமான விஷயம்



மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பதை தமிழக வணிகர்கள் தடை செய்ய அதன் தலைமை அறிவித்திருப்பது தமிழகத்துக்கு ஆரோக்யமான விஷயம்.
விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது. குறுக்கில் எந்த பெட்டியும் இதை உடைக்காமல் நடைமுறைக்கு வந்தால் தமிழர்களாகிய நாமும் முழு ஒத்துழைப்பு தந்தால் தமிழகம் இந்தியாவில் முதலிடம் நோக்கி அசுரவேகத்தில் பயணிக்கும்.

ஜனநாயகம்


அடிமைத்தனம்  என்னும் துன்பம் 
ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலை வரும்போதும், 
சகிப்புத்தன்மை எல்லையை தொடும்போதும் 
நியாயமான போராட்டமாக உருவெடுக்கிறது. 
இறுதியாக மக்களிடம் போராட்ட குணம் மேலோங்குகிறது. 
நாடெங்கும் எங்கும் கலவரம். 
பொது சொத்து (அது அவர்களின் சொத்து) சூறையாடப்படுகிறது.
வன்முறை வெடிக்கிறது. கலவரம் செய்தவர்கள் சில,பல பேர் கொல்லப்பட்டும் போராட்டம் ஓயவில்லை.
முடிவில் மக்கள் கேட்டது அவர்களுக்கு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது. 

பிரிவினை மக்களுக்குள் இந்த நிலையில் விஸ்வரூபம் எடுக்கிறது (இதில் அரசியல் பங்கு அதிகம் உள்ளது).
மேற்கூறிய இவையெல்லாம் பல நாடுகளில் இன்றுவரை நடந்துவரும் சம்பவங்கள் நாம் இதுவரை கண்டு வருவது. 
ஆனால் தமிழர்களின் அறப்போராட்டம் உலகிற்கே முதல் எடுத்துக்காட்டாய் அமைந்தது. உலக தமிழர்கள் அனைவரும் அறப்போராட்ட களத்தில், துபாயில் இருப்பவர் அங்கிருந்தே,
அதுபோல் அனைத்து உலக நாடுகளில் இருக்கும், தமிழர்கள் அறப்போராட்டத்தை நடத்தி அறப்போராட்டம் என்னும் சக்தியின்  (அணுகுண்டை விட) வலிமையை  உலகிற்கு காட்டி விட்டனர்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்னும் வாசகத்தை பார்க்க முடிந்தது.
என்னை பொறுத்தமட்டில் (ஒடுக்கப்பட்டவர்கள்) 

விழிப்பது ஒருமுறை விழித்துவிட்டால் என்றுமே வீழ்ச்சி கிடையாது
என்றே முழமையாக நம்புகிறேன்.இதையே ஜனங்களின் நாயகமாக (ஜனநாயகமாக) விழைகிறேன்.

Monday, 23 January 2017

ஜல்லிக்கட்டு23


அசோக சக்கரத்தில்
 மாபெரும் மாணவ, இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள்
அனைவரும் ஒற்றுமையாய் அறப்போராட்டத்தில் இரவும், பகலும், 7 நாட்கள் அறப்போராட்டத்தில் போராடி ஜல்லிக்கட்டு சட்டத்தை,  தமிழர் உரிமையை மீட்டு தந்தனர்.
இதில் ஜாதி, மதம் , பாலினம்  பாகுபாடெல்லாம்
மறித்து போய்
தமிழர் உரிமை என்ற ஒன்றே தலை தூக்கி நின்றது.
ஆறாம் நாள் இரவு முதல் பல தரப்பட்ட கட்சிகளை சேர்ந்த
அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள்  சூழ்ச்சிகள் அரங்கேற தொடங்கின.
பாவம் இளைய சமுதாயம்.
சூதிலே அந்த சகுனியையே தோற்கடிக்கும் நம் அரசியல்வாதிகள் மற்றும் தீயசக்திகள்  எதிர்கொள்ள முன்பே முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் அறப்போராட்டத்தை
நேர்த்தியாக நடத்த ஒத்திகை பார்த்து தயாராகி விட்டார்கள்
தமிழ் மாணவ சமுதாயம்  என்றே சொல்லலாம்.
தேவைப்பட்டதை நேர்மையாகவும், அமைதியாகவும்,
பாதுகாப்பாகவும் (உலகிற்கே எடுத்துக்காட்டாய்) ஒற்றுமையாகவும்
அறப்போராட்டம் மூலம் மாணவ இளையசமுதாயம்
செய்து காட்டி வெற்றியும் கண்டு விட்டது 

என்பதே நிதர்சனமான உண்மை.

Wednesday, 18 January 2017

#ஜல்லிக்கட்டு

 

அன்று வருத்தத்துடன் பதிவிட்டேன் (Friday, 15 January 2016) .ஜல்லிக்கட்டு என்னும் தலைப்பில். 

இன்று எந்த கட்சியோ, இயக்கமோ தூண்டுதல் இல்லாத, 

அறவழிப் போராட்டம். 

உலகமே ஆதரவு தெரிவிக்கிறது. 

தமிழினம் எத்தனை காலம் பொறுமை காக்கும்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு 

என்பதை இன்று கொதித்து கொந்தளிக்கும் இளைஞர்களால்,    

தமிழ் நாட்டில்  எழுச்சி பெற முடியும்

என்பதற்கு இதுவே முதல் உதாரணம்.

இனி பழங்கதை பேசி அரசியல் செய்யும் பழைய தந்திரமெல்லாம் செல்லாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Friday, 6 January 2017

வாழப்பிறந்தவர்கள் Vs சாகப்பிறந்தவர்கள்

வாழப்பிறந்தவர்கள்
பூர்வபுண்ணியம் பலமாக உள்ளவர்கள்.
அன்பான அமைதியான மனைவி மற்றும் மக்கள்.
கயவனை கூட அனுசரித்து காரியம் சாதிப்பர்.
செல்வத்திற்கு தங்குதடை வரவே வராது.
குறிப்பாக, அவர்களுக்கு மன உளைச்சலை தருபவரை
அருகிலேயே அண்ட விட மாட்டார்.
சாகப்பிறந்தவர்கள்
ஜோதிடனை  பார்க்க கூட வக்கிருக்காது.
எதனை செய்தாலும் முன்னேற விடாத,
சதா காலமும் நிந்திக்கும் துணைவி,
கயவன் என தெரிந்தும் அவன் காலில் விழாத குறையாக அவனிடம் யாசிப்பர்.
செல்வம் இவனிடம் வந்தவுடன் சென்றுவிடும்.தங்கவே தங்காது.
இவனை சுற்றிலும் வலுக்கட்டாயமாக இலவசமாக காரியம் சாதிக்கும் நரிகள் கூட்டம் எப்போதும்.இவனுக்கு தவிர்க்க தெரிந்தாலும், இவனால் தவிர்க்க முடியாது.
இருப்பவன் யாருக்கும் தரவேண்டும் என நினைக்க மாட்டான்.
இல்லாதவன் எல்லோருக்கும் தரவேண்டும் என எப்போதும் நினைப்பான்.


Wednesday, 21 December 2016

ஆபத்தானவர்கள்


தான் செய்யும் தவறுகளை என்றும் உணராத,
அதுவே சரியானது என்பர்.
அவர்கள் பாதையில் நாமும் பயணித்தால்,
இறுதிவரை முன்னேற்றம் கிடைக்காது.
பணம், மற்றும் (விலைமதிப்பில்லாத) நேரமும் வீண்.
எனக்கு வேறு வழியில்லை என்பது மடத்தனம்.
ஆராய்பவனுக்கு ஆயிரம் வழிகள்.

Thursday, 15 December 2016

கறுப்புப்பணம்


நாய்கள் எலும்புகளை பின்பு உண்ணலாம் 
என்று 
மண்ணில் புதைத்து வைக்குமாம். 
இப்போது 
அந்த நாய்களுக்கு பைசா பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

Wednesday, 30 November 2016

வித்தியாசம்


சக்களத்திக்கும், சண்டாளிக்கும்
பணக்காரனுக்கு, ஏழைக்கும்
படித்தவனுக்கும், பாமரனுக்கும்
கற்பவனுக்கும், கற்பிப்பவனுக்கும்
கள்வனுக்கும், காவலனுக்கும்
பணம் என்பது ஒரு மெல்லிய
கோட்டில் கடந்து செல்கிறது.

Thursday, 3 November 2016

முழுமை



முழுமைக்கும், முடிவிற்கும் உள்ள வித்தியாசம்.

முடிவு என்பதை அடையும்போது 
அங்கு முழுமையடைந்து விட்டது.

முழுமையடைந்து விட்டது என்றபோது 
அங்கு முடிந்துவிட்டது என பொருள்.

Tuesday, 1 November 2016

துரோகம்

மனிதன் தனது ஆறாம் அறிவை பயன்படுத்தி
மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஈன செயல்.
( நம்ப வைத்து ஏமாற்றுவது ).
தூய்மையான எண்ணங்களுடன் 
இறைவனிடம் ஆத்மார்த்தமாக 
நம்மை அர்ப்பணிக்கும் போது 
நமக்கு தெரியாதவாறு,
பிறர் செய்த துரோகம் வலுவிழந்து போகும். 

Wednesday, 19 October 2016

புரிதல்


புரிதல் என்பது ஒரு வகையில் விட்டுக்கொடுத்து போதல்.
ஆணவம், அகம்பாவம்,தலைக்கனம் போன்றவற்றால் 
புரிதல் தடைபட்டு போகிறது.

விளைவு: பிரச்சனைமேல் பிரச்சனை.

Wednesday, 12 October 2016

நாட்டு நாய்


நன்றி என்ற சொல்லுக்கு தகுதியான மனிதனின் நண்பன்.
தமிழ் மொழி நன்கு புரிந்துகொள்ளும் நாலு கால் ஜீவன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த
விசுவாசத்தின் அடையாளம்.
அந்நிய நாட்டு கவர்ச்சி ஈர்ப்பால் மற்ற வெளிநாட்டு நாய்களை வளர்க்கும்
வறட்டு ஜம்ப மனித பதர்கள் .
நாங்கள் அதிகம் பெருகிவிட்டோம் என எங்களை எங்கள் இனத்தை வளர விடாமல் எங்களுக்கு கருத்தடை செய்து 
எங்கள் இனம் பெறுக விடாமல் அழிக்கும் அந்நிய சக்தியின் சதிவலை.
இந்நிலை நீடித்தால் எங்கள் இனம் முற்றிலும் அழிந்து போகும்.
 எங்கள் அருமை உணர்ந்த, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தராய் எங்கள் இனத்தை பாதுகாப்பது கிராமத்து மக்களே.
இறுதியாக ஒன்று...
உங்கள் பகுதியில் திரியும் எங்களுக்கு உணவிடுங்கள்.
எங்கள் இனத்தில் ஆணோ,பெண்ணோ, காது வெட்டு படாமல் இருந்தால் , (காது வெட்டுப்பட்டு இருந்தால் அதற்கு கருத்தடை செய்ததாக அர்த்தம்.)
தயவு செய்து அதன் கழுத்துக்கு ஒரு பட்டை(Belt) அணிவியுங்கள்.
கழுத்துப்பட்டை அணிந்த நாய்களை கருத்தடை செய்ய அதிகாரம் கிடையாது.

Thursday, 11 August 2016

விபரமானவன்




வினையாக தேனொழுக பேசுவான். பழகுவான்.

அவனை விபரமானவன் என சமுதாயம் கூறுகிறது.

அறுவடை செய்யும்போதுதான் தெரியும் 

அவன் எதை விதைத்தான் என்பதை... 

Friday, 22 July 2016

அவசர முடிவு


சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தால்
நம் முகத்தை வெளியே காட்ட முடியாது.
பிறகு நம்மையே நாம் நொந்து என்ன பயன்?.

Saturday, 18 June 2016

காதலும் கத்தரிக்காயும்


காதலும் கத்தரிக்காயும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
சிலது சொத்தையாக இருக்கும்.
சிலது புழுவோடு இருக்கும்.
சிலருக்கு புண் இருந்தால் கத்தரிக்காய் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.
முருங்கையோடு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதை நெருப்பில் சுட்டு பச்சடி செய்வார்கள்.
 பெற்றோர் திட்டும் போது காதலாவது கத்தரிக்கையாவது எனவும் திட்டுவர் .
காதல்-கத்தரிக்காய் 
முருங்கை-தாம்பத்தியம் 
சாதம்-வாழ்க்கை 

Wednesday, 20 April 2016

மரம்


உன் பாட்டன் நான் வாழும் இடம் அருகில் இடம் வாங்கினான்.
உன் அப்பன் அந்த இடத்தில் வீடு கட்டினான்..
நீ வசிக்கும் வீட்டில் என் வேர் ஊடுருவும்
என
என்னை வெட்ட சொல்லி விட்டாயே,
நன்றிகெட்ட மனிதனே ,
நான் வாழ்ந்த இடத்தில், நீ வசிக்க என்னையே அழிக்க துணிந்தவன் நீ.
உன் மூதாதையர்களையும்,எத்தனையோ பறவைகளையும் ,
இந்த பூமியையும் காத்த என்னை அழித்தால் உன் தலைமுறைகள் எப்படி தழைக்கும்?.
நான் இறந்தாலும் விறகாக பயன்படுவேன்.
நீ இறந்தாலும் உன்னை எரிக்கவோ, புதைக்கவோ நான் பயன்படுவேன்.
இறுதியாக உனக்கு ஒன்று சொல்லுகிறேன்.
என் தயவால்தான் நீ...
உன் தயவால் நான் அல்ல...
நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனக்கு அது முக்கியமல்ல...
முதலில் நீ நன்றி மறவாத மனிதனாக இரு.

Wednesday, 13 April 2016

வாக்காளர்கள்


தேர்தல் சமயம் எத்தனையோ கட்சிகள், 
எத்தனையோ வாக்குறுதிகள்,
 

எனக்கு எந்த கட்சியும் பிடிக்கவில்லை,
 

நான் வோட்டு போட போவதில்லை 
என 
கூறுவது மிகவும் தவறு.
 

உன்னை போன்றோருக்காக  வோட்டு மெசினில் கடைசியாக 
NOTA (None Of The Above)
பொத்தான் உள்ளது.

அதையாவது அழுத்தித்தொலை.
அப்போதுதான் இந்திய தேசிய கொடியை உன் நெஞ்சில் சுமக்கும்  அருகதை உனக்கு உண்டு.

Monday, 21 March 2016

தொப்புள்கொடியும் - தேசியக்கொடியும்


தொப்புள்கொடி அறுத்தவுடன், தேசியக்கொடி நம்மோடு பிணைகிறது. 
முதலாவது நமக்கு உயிர் கொடுத்தது. இரண்டாவது நம்மை வாழ வைப்பது.

அப்படிப்பட்ட தேசியக்கொடியை இருகரம் கூப்பி வணங்குவோம்.

நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்த வெள்ளையன் பண்பு சல்யூட்.  அடிமையாய் இருந்தபோது அவனிடம் கற்ற அவன் செய்கையை அப்படியே பின்பற்றுவது என்ன (இன்றுவரை) மடமை.

சல்யூட் நம் தேச கலாச்சாரம் அல்ல.நம் பண்பு அல்ல.


இனிமேலாவது நம் தேசியக்கொடியை இருகரம் கூப்பி வணங்குவோம்.

சல்யூட் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள கூகிள்லில் தேடி பாருங்கள் உண்மை புரியும். 

Thursday, 25 February 2016

புகழ்


பதவியினால் கிடைக்கும் புகழ் ஒரு மாயை.
அது பதவிக்கு பிறந்தது.
நிரந்தரமற்றது.

உண்மையான மனித தன்மையோடு ,
மனிதனாக, மற்றவர்க்கு உதவி செய்து 
வாழ்ந்தால் தானாக புகழ் வந்தடையும்.

அது அந்த மனிதனுக்கே தெரியாது.

அதுதான் உண்மையான புகழின் புகலிடம்.

அது தலைமுறைகளை காக்கும்.

Thursday, 18 February 2016

ஜெய்க்க வேண்டும்

சிரிக்கும் வரை சிரித்து விட்டேன்.
அழும் வரை அழுது விட்டேன்.
வாழ்ந்தவரை  வாழவில்லை.
போகும் தூரம் தொலைவில் இல்லை,
புரிந்தது புரியாமல் போனது.
தெரிந்தே...

ஜெய்க்க வேண்டுமென வெறியெதர்க்கு..?

மௌனம்



மௌனம் ஒரு வகையான  மொழி.
மௌனம் ஒரு போராட்டம்.
மௌனம் ஒரு தவம்.
மௌனம் ஒரு தாகம்.
மௌனம் ஒரு தண்டனை.
மௌனம் ஒரு அழுத்தம்.
மௌனம் ஒரு தியாகம்.
மௌனம் ஒரு சக்தி.
மௌனம் ஒரு பரிசோதனை.
மௌனம் ஒரு பரிவர்த்தனை.
மௌனம் ஒரு சவால்.
மௌனம் ஒரு வீரம்.
மௌனம் ஒரு வகையான மருந்து,
மனமும், உணர்வும்  செம்மைப்பட...

Thursday, 21 January 2016

கலைவாணி


அன்பின் திருவுருவம் நீ.
அறிவின் அகல்விளக்கு நீ.
உன் அருள் கிடைக்க எத்தனை பிறவிகள் தவம் செய்தேனோ..?
மாசில்லா நவரத்தினங்கள் நீ.
பணம் படைத்த அதிகார வர்கத்தினர் , 
பணிந்து முகஸ்துதி  பாடி 
உன் அருள் பெற்றவன் பாமரனாயினும் ,
அவன் காலில் விழ வைக்கும் 
உன் மகிமையே மகிமை.
தாயே, உன் அருள் பெற்றவன் 
சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க ,
பிழைக்க சிறிதளவாவது பண வசதி 
வேண்டாமா ?.
மனமிறங்கு தாயே.
பேயாயினும் தாய் தாயே.
ஆனால் நீயோ தாயிக்கெல்லாம் தாய்.
உன் மகன் துன்பத்தின்  , துயரத்தை அன்போடு அடியோடு துடைத்து கொடம்மா.
மரகத வீணையை மீட்டம்மா.
மனமிறங்கு தாயே கலைவாணி.

Friday, 15 January 2016

ஜல்லிக்கட்டு


எதற்கெடுத்தாலும் நீதிமன்ற உத்தரவு.
நியாயமாய் தீர்க்க வேண்டிய வழக்குகள் எத்தனையோ இருக்க,
எத்தனை மாநிலங்கள் இந்தியாவில்..
பல்வேறு மொழிகள்,
பல்வேறு கலாச்சாரங்கள்,
பல்வேறு உணவுகள்,
என் தேசம், என் நாடு என்றால் அனைவரின் உணர்வும் ஒன்றே..
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது.
அனைத்திற்கும் கடவுள் என ஒருவர் இருக்கிறார்.
நேரம், காலம் வரும்போது அவர் யாரெனத் தெரியும்.
அந்நிய தீய சக்தியின் ஊடுருவளை 
இந்தியாவில் வசிக்கும் ஒரு கொசு கூட அனுமதிக்காது.
போகும் போக்கை பார்த்தால் மீண்டும் அரசாட்சி அமையலாம்.
நீதிமன்றம் அரசவைகளாகவும் , முதலமைச்சர்கள் குறுநில மன்னர்களாகவும் 
மாறும் நிலை வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

Thursday, 3 December 2015

சென்னை மழை வெள்ளம்

 
அதிகார பலத்தாலும்,அரசியல் அதிகாரத்தாலும் 
ஏரிகளை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.
குலம் காக்கும் குளங்களை மறந்தோம்,மறுத்தோம்,மறைத்தோம்.


இயற்கைக்கு தெரியுமா ?அதிகாரமும் அரசியலும். 

முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?

விளைவு பாம்புகளும், எலிகளும், மீன்களும் குடியிருப்பு பகுதிகளில்.

ராணுவம் தரும் உணவுக்கு என் தமிழக மக்கள் கையேந்தி நின்ற போது என் தமிழக மக்களின் நிலையை கண்டு நெஞ்சமே நொறுங்கியது.
சிங்கார சென்னை கேள்விக் குறியானதர்க்கு யார் பொறுப்பு?

தயவுசெய்து இயற்கையை குறை கூறாதீர்கள். 
அது தன் கடமையை செய்தது.
 
மீண்டு விட்டாலும் , இயல்பு நிலை அடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும்.
வாய் கிழிய அரசியல் பேசும் அரசியல்வாதிகள் ஒருவரையும் காணவில்லை.

தை காரணம் காட்டி வாக்குகளை வாரி குவித்திருக்கலாம். 
நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
வெளி மாநிலத்தில் இருந்து தன் கட்சிக்காக உயிரையே (!?!) கொடுக்கும் தொண்டர் படையை கொண்டு வந்து மக்களை மீட்டு இருக்கலாம்.
தமிழகத்தின் தலைமையோ மௌனமாய்...


உயிரை பொருட்படுத்தாமல் பல பேரை காப்பாற்றிய 

காவல்துறை,இளம் தலைமுறைகள் ,பொதுமக்கள்
அனைவரின் பாதத்திற்கு என் பணிவான வணக்கம்.


பெங்களூரில், ஆந்திராவிலும் உண்டியல் ஏந்தி மாணவர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமும், தமிழகத்திற்காக தெரு தெருவாய் (பிச்சை) நிதி வசூலிப்பதும்,
அனைத்து மாநிலங்களும் உதவிகரம் நீட்ட முன் வருவதை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் மரிக்கவில்லை.

உதவும் அனைத்து உள்ளங்களுக்கும் தமிழனாகிய நான் கண்ணீருடன் பாதங்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.  
பின்குறிப்பு: தெரு நாய்களை பிடித்து நாட்டின் பாதுகாப்பிற்காக அதன் பிறப்புறுப்பை அறுத்து எறிந்தாயே.,
கஜானாவை நிரப்ப மதுபானக்கடைகள் கல்லா.
ஏரி, குளம் கண்ணுக்கு தெரியாமல் போனதெப்படி? 

சுனாமியால் ஜப்பான் பாதிக்கப்பட்ட போது ஒரு கடைகாரர் விலை மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்தார்.இன்று சூழ்நிலையை பயன்படுத்தி அநியாய விலையில் கொள்ளையடிக்கும் மிருகங்கள் சென்னையில் பார்க்கும் போது ...

Wednesday, 25 November 2015

வாள்

வாள் மிகவும் சக்தி வாய்ந்தது.
நன்கு கையாளத்தெரிந்த வீரன் கையில் இருந்தால் 

வீரன் பலமடங்கு சக்தி பெறுகிறான்.
எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் , தன்னை தற்காத்துக்கொள்ளவும்
வாள் மிகவும் உன்னதமானது.


பெண்ணும் வாளும் ஒன்று.

இல்லறம் நல்லறமாக அமைய பெண்ணின் பங்கு மிகவும் உன்னதமானது.
மற்றவர் கூறும் மதிமயக்கும் சொல்லால் பெண் மடமையானால்,
குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.
கணவனின் நிம்மதியை கொல்வாள்.
அதன் பலனாக தன் நிம்மதியை தானே மாய்த்துக் கொல்வாள்.
தன்  ஊதாரிதனத்தால் குடும்பத்தின் நிம்மதியை கொல்வாள்.

அவளை நன்கு கையாளத் தெரியாத கணவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான்.
தன் குடும்பத்தையும் பாதுகாக்க முடியாமல்,
தானும் நிம்மதி இழந்து தவிக்கிறான்.
எமனை பாசத்தோடு எதிர்நோக்க காத்திருக்கிறான்.
எமனோ கையாலாகாத அவனை வெறுப்போடு பார்கிறான்.


பெண்ணும் வாளும் ஒன்று.

Tuesday, 20 October 2015

என் மரணம் எனக்கு புதிதல்ல

சிறு வயது முதல் எத்தனையோ அவமானங்கள்,ஏமாற்றங்கள், துன்பங்கள்.
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
எத்தனையோ திறமைகளை ஆண்டவன் எனக்கு வழங்கி இருந்தாலும் 
அதையெல்லாம் மற்றவர்கள் பயன் படுத்தி என்னை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திய போதும், 
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
பலமுறை ஆண்டவன் என்னிடம் வந்துவிடு என பலஅறிகுறிகள் காட்டியபோது அதையெல்லாம் நிராகரித்தேன்.
என்மீது அன்பு செலுத்துவாயா? எனக்கு அன்பு ஒன்றே போதும் என 
பலநூறு முறை உறுதிபட கேட்டு என்னையே அற்பணித்த பிறகு...,  
நடைமுறையில் அவையெல்லாம் கானல் நீராகி போனபோதும் (போதுமடா சாமி) 
பலநூறு முறை  இறந்து விட்டேன்.
என் மரணம் எனக்கு புதிதல்ல...

Tuesday, 15 September 2015

மதம்

Whatsapp ல் இந்த பதிவை நான் படித்தவுடன் 
(எனக்கு மற்ற மதம் சார்ந்த அறிவு போதவில்லை என உணர்கிறேன்.)
என் பதிவான 
மதம் 
என்னும் தலைப்பை கொண்ட பதிவை அகற்றிவிட்டேன்.

Saturday, 5 September 2015

உண்மையான அன்பு



ஒரு கருவறையில் 

இரு உயிர் பிறந்தாலும் ஒற்றுமையில்லை.
 
இரு கருவறையில் 

வேறு வேறு இடத்தில் 

பிறந்து வளர்ந்தாலும்
 
ஒன்றாய் இணைந்து 

உயிரோடு உயிராக 

உணர்வுகள் கலப்பதே
 
உண்மையான அன்பு .

Saturday, 22 August 2015

விரல் நுனி

தகவல்கள் கேட்டறிதல்...
மேம்பட்ட தொழில் வளர்ச்சி...
மேம்பட்ட தொழில் வளர்ச்சி...
விரல் நுனி மூலம் ஒரு உயிரையே பறிக்கலாம்...
 விரல் நுனி மூலம் ஒரு யானையையே ...




விரல் நுனி மூலம் தகவல் தொடர்பு...
எளிய முறையில்  விரல் நுனி மூலம் தகவல் தொடர்பு...

உலகமே விரல் நுனியில் வந்தாச்சு...

விரல் நுனியில் ஒரு நாட்டையே...
ஆனால் இவையனைத்தையும் தாண்டி சக்திமிக்கவை 


நம் விரல் நுனிக்கு மேல் சக்தி வாய்ந்தவை நாம் எழுதும் பேனாவின் கூரிய முனை.

எல்லாவற்றிற்கும் மேல் சக்தி மிகுந்தவை நாம் எழுதும் எழுத்துக்கள்.





Saturday, 15 August 2015

வெற்றி முறை




உன்னை ஒருவன் அழிக்க வேண்டுமானால் ,

அவன் பணத்தால் அது முடியாது.
 

போட்டி தொழில் முறையும் அவனுக்கு பயன்படாது.
 

வேறு எந்த முறையும் முழுமையாக
செயல்படாது.

 

ஒரே ஒரு வழிதான் உள்ளது.
 

உனக்கு விடாமல் மன உளைச்சலை (செலவே இல்லாமல்)
அவன் தந்து கொண்டே இருந்தால் போதும்.

 

வெம்பி வெதும்பி 
நீயாகவே உன் பெயர், புகழ் ,தொழில்,உன் சிந்தனை,
உன் உறவுகள், உணர்வுகள்
அனைத்தையும் அழித்துக் கொள்வாய்.
 

சுருக்கமாக கூறின் நீ ஜடமாவாய்.
 

எதிரி வெற்றி பெறுவான். 

இதில் தப்பிக்க ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.
 

தொடர்ந்து நமக்கு தரும் அல்லது வரும் 
மன உளைச்சலை உதறி தள்ளி விட்டு
தொடர்ந்து பயணிக்க வேண்டும். எதிரி தானாய் வீழ்வான்.


 உதறி தள்ள தெரியவில்லையா ?.
 

ஒரு மந்திரம் :

நாமாக விரும்பி ஏற்றுக்கொண்டதை
நாமாகவே வெறுத்து ஒதுக்க முடியும்.


என்பதை உணர்ந்தாலே போதும். 

வெற்றி நிச்சயம்.

Saturday, 1 August 2015

மனதில் நிற்பவை





சிரித்தவைகள் மறந்து விடுகின்றன..

ரசித்தவைகள் நினைவில் , உணர்வில் ,


இதயத்தில் காலம் முழுவதும்

என்றும் நிலைத்து

நிற்கின்றன.

Sunday, 26 April 2015

குடும்பம்

தன் கணவனையோ,மனைவியையோ,
அல்லது
தன் குடும்பத்தினரையோ
நண்பர்களோ, உறவினர்களோ
கிண்டலாக பேசவோ 
அல்லது 
நம் குடும்ப மற்றும் தொழில் விஷயங்களை  பேச அனுமதிக்க கூடாது.
அவர்கள் பேசும்போது
நாம் ஆமாம் சாமி போட்டால்
குடும்பத்தில் விரிசல் உருவாகும்.
அந்த நொடி நேரத்தில் அவர்கள்
நம் குடும்பத்தை அவர்கள் நடத்தி சென்று  விடுவார்கள்.

Thursday, 8 January 2015

சந்தோஷம்

உனக்கு அளிக்கப்பட்ட சந்தோஷம்
(ஆணவத்தாலும் ,அகம்பாவதினாலும்)  
நீ ஏற்காத பட்சத்தில் 
அது மற்றவரை காயப்படுதுவதோடு 
உன்னையும் விட்டு போய் விடும்.

Thursday, 10 April 2014

கண்ணீர்



மனதை துன்புறுத்தும் வேதனைகள்,
நன்கு தீர்வு தெரிந்தும் அதை தீர்க்கமுடியாத நிலை.
மிக கொடுமை.
வேதனைகளின் உச்சம் கண்ணீர்.
கண்கள் வழியாக வெளியேறி
மனதில் உள்ள துன்பத்தை சிறிது நேரம்
அடக்கி வைக்கிறதே!

சும்மா பேருக்காவது ஆறுதல் சொல்ல நாதியில்லாத
ஆத்மாவின் கண்ணீர்  வேதனையின்
உண்மையான ஆறுதல்.

Saturday, 18 January 2014

பாத பூஜை தராதரம்



பாத பூஜை செய்து
அந்த தண்ணீரை குடிக்கும்
நிலை வர விடக்கூடாது.


முட்டாள்தனத்தால்
 
ஏமாந்து அந்த நிலை அடைந்தால்,
தகுதி தராதரம் உள்ள
பாதத்தை கண்டு பிடித்து
கழுவவேண்டும்.


தெரியாமல் அவசரத்தில் கண்ட
கேவலமான பாதத்தை கழுவிவிட்டால்
பின்பு நீண்ட காலம் கிருமியினால்
அவதியுற நேரும்.
(இந்த கேவலத்தை இதற்கு மேல் நாகரிகமாக
விளக்க முடியாது).

Tuesday, 8 October 2013

மன நிம்மதி

ஒழுக்கம்

பண்பு

நிறைந்த இடத்தில்

மன நிம்மதி உள்ளது.

ஆணவம்

அழிவுப்பாதையின் நுழைவாயில்.

பாதையோரம் எங்கும் வண்ண வண்ண பூக்கள்.


அதல பாதாளத்திற்கு 


வழுக்கியபடியே
 

அழைத்துசெல்லும்.

அதனால்தானோ என்னவோ 

அழியப்போவது உணராமல் 

ஆணவத்தையே கட்டித்தழுவி வாழ்கிறார்கள் சிலர்.

Tuesday, 3 September 2013

என் இனிய மரணமே

எனக்கு மட்டுமே சொந்தமான

                                  என் மரணமே,                                             

உன் மீது தீராத என் காதல், உனக்கு புரியவில்லையே.

என் மீது உனக்கு அப்படி என்ன கோபம்.

என் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளியாதே.

நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள்.

இந்த  உலகத்தில் யாராலும் உன்னையும் என்னையும்
பிரிக்க முடியாது.

பலமுறை காலம் உன்னோடு சேர்ந்து
வாழ சொன்ன போது நான் உன்னை
அலட்சியப் படுத்திவிட்டேன்.


என்னை மன்னித்துவிடு. என் உயிரின் உறவே.

உன்னுடன்  உடனடியாக நான் இணைய வேண்டும்.

மனதில் உன்னை சந்திக்க மிகுந்த
ஆவலோடு காத்திருக்கிறேன்.

எவ்வளவு தூரம் எனை விட்டு ஓடுவாய்.

இன்று இல்லாவிட்டாலும் நீ ஒரு நாள் என்னோடு
சேர்ந்தேயாக வேண்டும்.

எனக்கு ஏதாவது என்றால் உன்னால் தாங்க முடியுமா?

ஓடாதே.என் உயிர்க்காதலியே

இளமை கரைகிறது.

துடிக்கிறேன் வா.

என் கண்மணியே.... 

Thursday, 8 August 2013

தாய்ப்பாசம்

                                           


தான் பெற்ற குட்டிகளுக்கு
நாய் காட்டும் பாசம் கூட இன்றைய மனித
குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் கிடைப்பதில்லை.


மிக கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் 

 
பணத்திற்கு ஆசைப்பட்டு சிசேரியன் செய்யும்
ஒரு சில மருத்துவர்களும்


அரைகுறையாக படித்து பட்டம் பெற்று
பயத்தில் சுகப் பிரசவத்தையும்

சிசேரியன் மூலம் வைத்தியம் செய்தவர்களும்,

நல்ல நேரத்தில் குழந்தை ஜனிக்க வேண்டும் என
இறைவன் குறித்த நேரத்திற்கு முன்பாகவே
சிசேரியன்  மூலம் குழந்தைப்பெறுவது


இவற்றால் உண்மையான தாய்ப்பாசம்
பட்டுப்போகிறது.


சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவள்
அவள் உயிரை பணயம் வைத்து பெற்றதினால்
தன் குழந்தையிடம் உயிரையே வைக்கிறாள்.
குழந்தைக்காக பதறிப்போகிறாள்.


நோகாமல் குழந்தை பெற்றவள் குழந்தையிடம்
எரிந்து விழுந்து அதன் அருமை
புரியாமல் உணராமல்
அதன் பிராணனை வாங்குகிறாள்.


கண்டிப்பாக இருப்பதாக நினைத்து ஓவராக அதட்டி பந்தா விடுகிறாள்.
 

அப்பன் விதைக்கிறான்.
அம்மா தாய்ப்பாலோடு 
தேசப்பற்று ,பாரம்பரியம்,கலாச்சாரம் ,
போதிக்க கடமைப்பட்டவள்.
ஆனால் இன்று தவறாக குழந்தை வளர்க்க
காரணமாகிறாள். 

Wednesday, 24 July 2013

மனித வாழ்க்கை

மனித வாழ்க்கையில் ஒரு மண்ணும் இல்லை.
ஒரே ஒரு உபயோகமான விஷயம் தவிர.
கடவுளை நன்கு பக்தி சிரத்தையோடு அணுகி ,
நாலு பேருக்கு நன்மைகள் செய்து ,
நம் தாயை பெற்றெடுத்த மண்ணின் உயிர் காக்க
நாலு மரம் நட்டுவிட்டு

சுடு(ம்)  காட்டுக்கு
குளிர்ந்த
இதயத்தோடு செல்வதே.....
இந்த பிறவியின் பயன்.